தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்புடைய வழக்கினை கடந்த 20-ஆம் நாளன்று விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
குறித்த அந்த குழுவில் மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்றும், இந்த குழு, ஆறு வாரங்களுக்குள் தங்கள் ஆய்வு பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக இன்று தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பேற்படுவதன் காரணமாக, அதனை மூடுமாறு வலியுறுத்தி கடந்த மே மாதம் நடாத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த ஆணைக்கமைய குறித்த தொழிற்சாலை மூடி முத்திரையிடப்பட்டதை அடுத்து, அந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் குறித்த நிறுவத்தின் உரிமையாளரான வேதாந்தா குழுமம் மனு தாக்கல் செய்தது.
குறித்த அந்த மனுவை விசாரித்த நிலையிலேயே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.