ஏமன் நாட்டில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஹோடேய்டா நகரில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அட் துராய்ஹிமி பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் இந்த வான் தாக்குதலை நடாத்தியதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
கொல்லப்பட்ட 26 பேருள் 22பேர் சிறுவர்கள் என்றும், 4 பேர் பெண்கள் என்றும் கூறப்படும் நிலையில், குறித்த இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் அல்கோயுய் எனும் இடத்தில் இருந்து தப்பிச் செல்பவர்களை குறிவைத்து வியாழக்கிழமை இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வாரத்தின் முன்னரும் வாகனம் ஒன்றை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடாத்திய வான் தாக்குதலில் பாடசாலைச் சிறுவர்கள் 40 பேர்வரை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.