இந்தியக் கடற்படைக்கு 111 உலங்குவானூர்திகளை 21,000 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்கள் கொள்முதல் குழு கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பாதுகாப்புத்துறைக்கு தளவாடங்களைத் தயாரித்துக்கொடுக்கும் நிறுவனங்களுடன், மத்திய பாதுகாப்புத் துறை இணைந்து, குறிப்பிட்ட தளங்களில் செயல்படுவது இதுவே முதல் முறை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
கொள்வனவு செய்யப்படும் இந்த உலங்கு வானூர்திகள் சுற்றுக்காவல்பணி, மீட்புப்பணி, போர்க்காலங்களில் எதிரிகளைத் தாக்கி அழித்தல் ஆகிய பணி என்பவற்றிற்கு பயன்பபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிகளுக்காக வாங்கப்படும் உலங்கு வானூர்திகளைத் தவிர கடற்படைக்கு 24 நவீன பன்முகத்தன்மை வாய்ந்த உலங்குவானூர்திகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் 14 பீரங்கிகள் ஆகியவை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.