இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் வியட்நாம் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத வகையில் இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது இருவரும் இரண்டு நாடுகளின் உறவு, மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வியட்நாம் நாட்டில் நடைபெறும் இந்தியா – வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வியட்நாம் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து இது தொடர்பான ஆலோசனை மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் 29ஆம் நாள் கம்போடியாவுக்கு பயணம் செய்ய உள்ளதாக விபரம் வெளியிடப்பட்டுள்ளது.