இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி வழங்கும் செயற்பாடுகள் இன்னும் தாமதித்தே வருவதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 65 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போய் இருக்கலாம் என்று பல்வேறு அமைப்புகளால் கணிப்பிடப்பட்டுள்ளன என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது காணாமல் போனோர் விடயத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் இயங்கி வருகிற போதிலும், தங்களது உறவினர்களுக்கு என்ன ஆனது என்பதை அறிந்து கொள்வதற்காகவும், அவர்களுக்கு நீதி வழங்கப்படுவதற்காகவும் மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் பொறுப்புக்கூறுதல் செயற்பாடு சவால் மிக்கதாகவே தொடர்ந்தும் இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.