தென் தமிழ்த் தேசத்தில் ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்ற நிலப்பறிப்பு நடவடிக்கையினை முடிவுக்கு கொண்டுவந்து, அந்த நிலப்பறிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே மணலாற்று நிலப்பரப்பு சிதைக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது முல்லைத்தீவு மண் சார்ந்த பிரச்சனையாக ஒதுங்கிவிடாது, தமிழின இருப்பு சார்ந்த பிரச்சனையாக அணுகி, இன்றைய போராட்டத்தை ஒரு முக்கிய புள்ளியாக வைத்துக்கொண்டு அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த நில ஆக்கிரமிப்பு எனும் இன அழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் பெயரில் சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர் நிலங்கள் களீபரம் செய்யப்பட்டுவரும் நிலையில், முல்லைத்தீவு மகாவலி பிரதேச நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற மாபெரும் கண்ட ஆக்கிரமிப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்பதாக, மகிந்த ராஜபக்சதான் தமிழின அழிப்பினைச் செய்கின்றார் எனவும். அவரது ஆட்சியை விழுத்தினால் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பது மட்டுமன்றி, பொறுப்புக் கூறலும் நிச்சயமாகக் கிடைக்கும் என்றும், ஒரு அனைத்துலக விசாரணை கூட கிட்டும் என்றும்எங்களுடைய மக்களை நம்பவைத்து, அந்த ஆட்சியை மாற்றியமைத்த பிற்பாடு, இந்த ஆட்சி நல்லாட்சி என்று எம்மவர்களே கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில், இன அழிப்பின் முக்கியமான அங்கமாக இருக்கக்கூடிய இந்த நிலப் பறிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியு்ளார்.
இது ஒரு ஆட்சி சம்பந்தப்பட்ட விடயமா அல்லது இன அழிப்புச் சம்பந்தப்பட்ட விடயமா என்று எமது மக்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும் எனவும், இது ஒரு இன அழிப்பு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தால் ஒரு ஆட்சியை விழுத்தினால் இன்னொரு புதிய ஆட்சி உருவாகினால் இந்த இன அழிப்பை நாங்கள் தடுக்கலாமா இல்லையா என்பதைப்பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி நாங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம் எனவும், அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு, தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த இன அழிப்பிற்கு பின்னால் இருக்கக்கூடிய தத்துவத்தை, அந்தக் கொள்கையினை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தேசத்தைப் பொறுத்தவரையிலே இந்த தீவு ஒரு சிங்கள பௌத்த நாடு எனவும், இந்த முழுத் தீவும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும், இன்றைக்கு வடகிழக்கிலே தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வது புத்தபெருமான் தங்களுக்கு வழங்கிய தீவு என்ற அவர்களது கற்பனைக்கு சவாலாக இருக்கிறது எனவும், தமிழர்கள் ஒரு தேசமாக இந்தத் தீவில் வாழக்கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் அவர் விபரித்துள்ளார்.
இது ஆட்சி சம்பந்தப்பட்ட விடயம் அல்ல என்பதுடன், இது அவர்களுடைய இனம் சார்ந்த அடிப்படைக் கொள்கை என்பதையும் விளக்கியுள்ள அவர், எந்த ஆட்சி மாறினாலும் அவர்களுடைய கொள்கை ஒன்றே எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையிலே நாங்கள் போராடியே எமது உரிமைகளைப் பெறலாம் எனவும், ஏதோ 16 இலே தீர்வு வரும், 17 இலே தீர்வு வரும் 18ஐயும் தாண்டி இப்போது 19 இல் தீர்வு வரும் எனக் கூறி நாங்கள் எம்மையே ஏமாற்றக்கூடாது என்றும் இதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவகையில் இந்த மாபெரும் போராட்டத்தை ஒழுங்குபடுத்திய முல்லைத்தீவு மாவட்ட புத்திஜீவிகளுக்கு தலைவணங்கி நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எம்மைப்பொறுத்தவரையில் இந்த மணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் எனவும், தென் தமிழ்த் தேசத்தை ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுடன், அது முடிவுக்கு வர இருக்கின்றது என்றும், அந்தப் பறிக்கப்பட்ட தென்தமிழ்த் தேசத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மணலாற்று நிலப்பரப்பு சிதைக்கப்படுவதன் மூலம் உறுதிபடுத்தப்படும் என்றும் அவர் விபரித்துள்ளார்.
தமிழினத்தைப் பொறுத்தவரையில், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் இது முல்லைத்தீவு மண்ணைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது தமிழ்த் தேசத்தைச் சார்ந்த பிரச்சனை. இது எங்களுடைய இருப்பு சார்ந்த பிரச்சனை எனவும், இந்த இடத்திலே இதன் ஆழத்தை நாங்கள் விழங்கிக்கொள்ளாமல், இது வெறுமனே முல்லைத்தீவு மக்களுடைய போராட்டம் என்று நினைத்து, எங்களை நாங்களே ஏமாற்றி நடந்துகொள்வோமாக இருந்தால், இந்த இனம் அழியும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மாறாக முல்லைத்தீவு மண் பறிபோனால், மணலாறு மண் பறிபோனால் தமிழர் தேசம் பறிபோனதற்கு சமம் என்பதை விளங்கிக்கொண்டு, இன்று பிரிந்து போராடுகின்ற அனைத்து மக்களும் அணிதிரண்டு போராட வேண்டும் எனவும், எமது இனத்தை அழிவில் இருந்து தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் போராட்டம் ஒரு முற்றுப் புள்ளியாக அமையும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.