அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே நேற்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள வர்த்தக இணக்கப்பாடு, தம்மை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டுப் பங்காளிகளான மூன்று நாடுகளில், கனடாவைத் தவிர ஏனைய அந்த இரண்டு நாடுகளும் தமக்கிடையே இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் NAFTA பங்காளிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தம்மை ஊக்கப்படுத்துவதாகவும், NAFTA குறித்த மீள் பேச்சுக்களை முன்னே கொண்டு செல்வதற்கு இது மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள குறித்த அந்த உடன்பாட்டில் உள்ள விடயங்களை கனேடிய பேச்சுவார்த்தைக் குழுவினர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று குறித்த அந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதை அடுத்து கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவும் இதுபோன்ற ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் எனவும், இல்லையேல் கனேடிய பொருட்களுக்கு கடுமையான வரிவிதிப்பினை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ரூடோ இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கனேடி வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், தற்போது வோசிங்டன் சென்றுள்ளதுடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சுடன் முத்தரப்பு NAFTA உடன்பாடு குறித்த பேச்சுக்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை NAFTA குறித்த பேச்சுக்களில் கலந்துகொள்ளும், பிரதமரின் கொள்கைச் செயலாளர் உள்ளிட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தலைமை பேச்சுவார்த்தை அதிகாரி தலைமையிலான குழுவினரும் இன்று காலையில் வோசிங்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.