தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்றைய நாள் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த மகாவலி எல் வலயம் தொடர்பில் மூன்று கட்டங்களாக அண்மைக்காலத்தில் தமிழ்மக்களின் காணிகளுக்கு சிங்கள மக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ஆட்சிகாலத்தில் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் வழங்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய சனாதிபதியினால் அதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது எனவும், இரண்டாவதாக வெலிஓயா பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் வவுனியாவில் நடமாடும் சேவை ஊடாக அதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் விபரித்துள்ளார்.
இந்த மாதம் 6ஆம் நாள் 8 சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது எனவும், நேற்றையநாள் சனாதிபதியின் செயலணி கூட்டத்தில் மகாவலி எல் வலயத்திற்கு கீழ் காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கின்றது என்று சனாதிபதி சவால் விட்டு பேசியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கே கலந்து கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்திற்கு கீழ் எட்டுப் பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன், இன்னும் ஆறு மாத காலத்திற்குள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது என்ற செய்தியினை அங்கு சொல்லாமல், கடந்த மூன்றரை ஆண்டுகாலம் இந்த ஆட்சிக்கு சகல வழிகளிலும் அரசினை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எமது பிரதிநிதிகள் இவ்வாறு இருந்தால் மக்களின் காணிப்பிரச்சனை, காணாமல் போனோர் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது எனவும், ஆகவே இன்றைய மக்கள் போராட்டம் போல் தொடர்ச்சியாக அரசியல் கட்சியினை தாண்டி தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம்தான் தீர்வு காணப்படவேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், மகாவலி வலயத்தின் ஊடாக தமிழ் மக்களது காணிகள் சுவீகரிக்கப்படவில்லையென தெரிவித்ததன் மூலம், மைத்திரி பகிரங்கமாக பொய் சொல்கின்றார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாவலி எல் வலயத்தின் கீழ் தமிழ் மக்களது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களவர்களிற்கு வழங்கப்பட்டமை தொடர்பில் புகைப்படப்பிரதிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது எனவும், இதனையெல்லாம் தெரிந்து கொண்டும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மைத்திரி நிலசுவீகரிப்பு நடைபெறவில்லையென சொல்லிய போது வாய்மூடியிருந்ததாக சொல்லப்படுவது ஏமாற்றுவேலையே என்றும் அவர் சாடியுள்ளார்.





