இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான அனைத்துலக நீதியை கோரும் வகையில் 3 விடயங்களை முன்வைத்து மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்வைத்த பிரேரணை சபையில் கொள்கைரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 130வது கூட்டம் இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது, குறித்த அந்த விடயம் தொடர்பான பிரேரணை ஒன்றை சிவாஜிலிங்கம் சபைக்கு கொண்டுவந்தார்.
அந்த பிரேரணையில் இலங்கை அரசை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லுதல், இலங்கை மீது இராணுவ தடைகளை விதித்தல், வடகிழக்கு மாகாணங்களில் ஐ.நா கண்காணிப்புடன் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துதல் போன்ற கோரிக்கைகள் கூறப்பட்டுள்ளன.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் தவராசா. குறித்த பிரேரணையானது கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது ஒன்று என்ற போதிலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு அதனை அனுப்புகின்றபோது முறைப்பாடியான ஆவணமாக அதற்கேற்ப மொழிநடையில் மாற்றம் செய்யவேண்டும் எனவும், இதற்கு குழு ஒன்றினை அமைத்து அதற்கேற்ப அனுப்புவதுதான் முறைப்படியாக இருக்கும் என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட சிவாஜிலிங்கம், அவைத்தலைவர் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து அதற்கு செயற்படுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், தவராசா, அஸ்மின், சர்வேஸ்வரன், சஜந்தன் ஆகியோரைக் கொண்டு அவைத்தலைவர் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவானது இரண்டு ஒரு நாட்களில் கூடி முறைப்படியான தீர்மானத்தை அடுத்த சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் என்று அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.