நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு சனவரி மாதம் 2 ஆவது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, உள்ளாட்சித் தேர்தலின் போது வழக்கை விசாரித்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறப்படுவதால் தற்போது வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடியும் வரை, வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளும் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் கடந்த 1954 ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட சாசனத்தில் இணைக்கப்பட்டது.
இந்தப் பிரிவில் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் செய்தால் அங்கு சொத்துரிமை கோர முடியாது எனவும் அந்த விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.