ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாலஸ்தீன அகதி அமைப்புக்கு நிதி வழங்குவதை அடுத்த வாரத்திலிருந்து முற்றிலும் நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
குறித்த அந்த அமைப்பை, திருத்தமுடியாத குறையுள்ள அமைப்பு என்று அது வருணித்துள்ளது.
அது குறித்து கவனமாய்ப் பரிசீலித்ததாகவும், இனிமேல் அதற்கு நிதி வழங்கக்கூடாது என்று முடிவெடுத்துள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூட் அப்பாஸின் பேச்சாளர், அமெரிக்காவின் முடிவு தமது மக்களுக்கு எதிராக தாக்குதல் என்று வருணித்துள்ளார்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் இனி அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லையென்பதை, இத்தகைய முடிவுகளால் மாற்றிவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாலஸ்தீன அகதிகளின் பராமரிப்பு செலவினங்களுக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படும் நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய இதர நாடுகள் முன்வர வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.