ஏமன் நாட்டில் 40 சிறுவர்கள் உள்பட 51 பேர் கொல்லப்பட்ட வானூர்தித் தாக்குதலுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வருத்தம் தெரிவித்துள்ளன.
ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் சவுதி நாட்டின் ஜிசான் நகரின் மீது கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் சடா நகரின் சந்தைப் பகுதியில் வானூர்தித் தாக்குதலை மேற்கொண்டது.
இதன்போது அந்த பகுதியில் பயணித்த பேருந்து ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதில் 40 சிறுவர்கள் உள்பட 51 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு பேருந்து மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானற்ற தாக்குதல் தொடர்பாக
நியாயமான பன்னாட்டு குழுவினரின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருந்தது.
பின்னர் இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய சவுதி தலைமையிலான கூட்டுப் படையை சேர்ந்த உயரதிகாரிகள் தங்கள் பக்கம் தவறுகள் உள்ளதற்காக இன்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.