ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நிலவும் அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தீவிர முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறானதொரு முயற்சியில், மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோ, ஈடுபட்டுள்ளாரென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹேமசிறி பெர்ணான்டோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருடனும் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதால், இருவருக்கும் இடையில், சமரச முயற்சியொன்றை மேற்கொள்ளுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியே ஹேமசிறியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகக் கடமையாற்றிய அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பயணியாட் தொகுதியின் பிரதானியாக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது. இதேவேளை, மக்கள் வங்கியில் தனது செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹேமசிறியின் நீண்டகால அரசியல் அனுபவமும், சிறந்த தொடர்புகள் காரணமாக, வழங்கப்படும் கடமைகளை பொறுப்புடன் அவர் செய்வார் என்பது சகல தரப்பினரின் அபிப்பிராயங்களாகும். இந்த நிலையில், பணியாட் தொகுதியின் பிரதானியாக அவரை நியமிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன.