ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், அப்போது வேட்பாளராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் சந்திக்க வேண்டுமென்ற திட்டத்துக்கு, ட்ரம்ப்பும் அப்போது அவரது பிரசாரக் குழுவின் ஆலோசகராக இருந்தவரும் தற்போதைய சட்டமா அதிபருமான ஜெப் செஷன்ஸ் ஆகியோர் ஆதரவளித்தனர் என, ட்ரம்ப் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஒருவரின் சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்திடம் (எப்.பி.ஐ) பொய் கூறினார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு, அதற்கான தண்டனையை எதிர்கொண்டுள்ள, ட்ரம்ப் பிரசாரக் குழுவின் ஆலோசகராகப் பணியாற்றிய ஜோர்ஜ் பப்படோபொலஸின் சட்டத்தரணிகளே, இவ்விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரசாரக் குழுவின் கூட்டமொன்றிலேயே, இந்த முன்மொழிவை பப்படோபொலஸ் முன்வைத்திருந்தார் என, ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த போதிலும், அதற்கான எதிர்ப்பை, தான் வெளியிட்டிருந்ததாக, செஷன்ஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, குறித்த முன்மொழிவை பப்படோபொலஸ் முன்வைத்தபோது, அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல, ட்ரம்ப் தலையசைத்தார் எனவும், அது தொடர்பாக ஆராயுமாறு, செஷன்ஸுக்குப் பணித்தார் எனவும் குறிப்பிட்டுள்ள பப்படோபொலஸின் சட்டத்தரணிகள், அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த செஷன்ஸ், அத்திட்டத்தை விரும்பியிருந்தமைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதோடு, அதுகுறித்து, பிரசாரக் குழு ஆராய வேண்டுமெனக் கூறினாரெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அத்திட்டத்தை செஷன்ஸ் எதிர்த்தார் என்ற, அவரது முன்னைய கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறாரென, அவரது சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர். மறுபக்கமாக, குறித்த கூட்டத்தை, “முக்கியமற்றது” என வர்ணித்த ஜனாதிபதி ட்ரம்ப், அது தொடர்பில் தனக்கு ஞாபகமில்லை என, ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.