வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட தயாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஊடாக அவரைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
”முதலில் இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிடுவதற்கு முதலமைச்சர் தன்னை மனதளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவர் அதற்குத் தயார் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக, மாற்று அணி ஒன்றின் ஊடாக அவரைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இது விக்னேஸ்வரன் விடயத்தில் மாத்திரம் அல்ல.
நாங்கள் எந்த வழியிலாவது எதிர்காலத்தில் நடக்கும் மாகாண மற்றும் தேசிய மட்டத் தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, ஒரு பரந்துபட்ட கூட்டணியை உருவாக்கவுள்ளோம்.
வடக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை, உள்ளூராட்சித் தேர்தல்கள் தெளிவாக காண்பித்துள்ளன. அவர்களின் வாக்குவங்கி, ஏற்கனவே 35 வீதத்தினால் சரிந்து விட்டது.
எனவே, மாற்று அரசியல் முன்னணி ஒன்றின் மீது மக்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.