தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை எனவும், 13 ஆம் திருத்தச் சட்டத்தில் மேலும் சில அதிகாரங்களை வழங்கினால் போதும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியது அப்பட்டமான உண்மை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் எமக்கு சமஸ்டி தேவையில்லை என்று கூறி தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு இரட்டை வேடம் போட்டு வருகின்றது என்றும் அவர் சாடியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவையில்லை என்று காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சுமந்திரன் பேசியது அப்பட்டமான உண்மை என்றும், தமிழ் மக்களுக்கு சமஷ்டி வேண்டாம் என்று கூறும் சுமந்திரன் தொடர்ந்து 13ம் திருத்தச்சட்டத்தில் சில அதிகாரங்களை வழங்கி திருத்தம் செய்தால் போதுமானது என்று கூறுகிறார் என்றும் அவர் விபரித்துள்ளார்.
அத்துடன் அதனை தான் தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிட்டுள்ளதாகவும், அதற்கே மக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளதாகவும், இது அப்பட்டமான உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உண்மை ஊடாக சுமந்திரனும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களிடம் அம்பலப்பட்டிருக்கும் நிலையில், சமஸ்டி வேண்டாம் என்று தான் கூறவில்லை என்றும், சமஷ்டி பெயர்பலகையே வேண்டாம் என்று கூறியதாகவும் சுமந்திரன் அப்பட்டமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் என்பதனால் இது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தாக அமையாது எனவும், சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தாகவே அமைந்துள்ளது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.