வடக்கு, கிழக்கில் மூலோபாய ரீதியில் முக்கியமான இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பியகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ள அவர், அரசாங்கம் தேசிய பாதுகாப்பை எப்பொழுதும் விசேட காரணியாகக் கருதியே வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது எனவும்,. இதனை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து வருகிறது என்றும் குறிபபிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக சிலர் கருத்துக்களைக் கூறி மக்கள் மத்தியில் குறுகிய அரசியல் லாபம் தேடுவதற்கு குழுவொன்று முயற்சித்து வருகிறது எனவும், இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பொய்யான தகவல்களை சமூக மயப்படுத்துவதற்கும் அக்குழு முயற்சிக்கிறது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால் முப்படையினர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மழுங்கடிப்பதற்கும் முயற்சிக்கப்படுகிறது எனவும், வடக்கு, கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொது மக்களின் காணிகள் விடுக்கப்படும்போதும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன எனவும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதிருப்பதை உறுதிப்படுத்த பாதுகாப்புத்தரப்பினருக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் உதவிகளை அரசாங்கம் முழுமையாக வழங்கி வருகிறது என்றும் கூறியுள்ளார்.