ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பதில் தனக்கு தனிப்பட்ட ரீதியில் மாற்று கருத்துக்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்காக தான் அவர்களின் விடுதலையை ஏற்றுக்கொள்வதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோதே இதனைத் தெரிவித்துள்ள அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அவர் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் குற்றவாளிகளை மன்னித்து விடுவிக்க கூறியுள்ளதால், தாமும் அதற்கு உடன்படுவதாக கூறியுள்ளார்.
எனினும் தனிப்பட்ட ரீதியில் குற்றவாளிகளை விடுவிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் அதிகாரத்தை மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த நிலையில், மாநில அரசு குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.