அனுராதபுர சிறைச்சாலையில் எட்டு அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் உணவுப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
தமது வழக்குகளை விரைவாக விசாரித்து விடுதலை செய்யுமாறு கோரியே இவர்கள் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுலக்ஷன், திருவருள், ஜெயச்சந்திரன், தபோரூபன், தில்லைராஜ், ஜெகன், சிவசீலன் மற்றம் நிமலன் ஆகியோர், கடந்த வெள்ளிக்கிழமை முதல் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இவர்கள் மேற்கொள்ளும் ஐந்தாவது உணவுப் புறக்கணிப்பு போராட்டம் இதுவாகும்.
எனினும் ஒவ்வொரு போராட்டத்தின்போதும், போலியான வாக்குறுதிகளை வழங்கி போராட்டம் இடையில் நிறுத்தப்பட்டுப் பின்னர் மீண்டும் போராட்டத்தில் இவர்கள் குதிப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதேவேளை அனுராதபுரம் சிறையில் உணவுப் புறக்கணிப்புத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுள் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று அவசர அவசரமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிவசுப்பிரமணியம் தில்லைராஜா எனும் அரசியல் கைதியே இவ்வாறு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீரிழிவு நோயாளியான இவர் மீது விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுராதபுரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய எட்டு அரசியல் கைதிகளுடன் தம்மீதான விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்யுமாறு கோரி கடந்த வெள்ளிமுதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் குதித்திருந்த நிலையில், நீரிழிவு நோயாளியான அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதையடுத்தே தற்போது அவர் அவசர அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.