அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று 5வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் உணவுப் புறக்கணிப்புப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், இவர்களின் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
அனுராதபுர சிறைச்சாலையில் 8 கைதிகள் ஆரம்பித்த உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தின் நிலைமை இப்போது புதிய திருப்பத்தை அடைந்துள்ளது என்று சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சட்டவாளர் சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை முடித்து வைக்கலாம் என்று கருதி, சிறை அதிகாரிகள், உணவுப் புறக்கணிப்பை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவரான தில்லைராஜ் என்ற கைதியை, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றினார்கள் எனவும், ஆனால் தில்லைராஜ் வெலிக்கடைச் சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் அவர் விபரித்துள்ளார்.
அவரைப் போன்று 30 வரையான கைதிகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் கூட உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள் எனவும், இதன்மூலம் இலங்கை அரசாங்கம் இப்போது அனுராதபுரம், வெலிக்கடை என்று இரண்டு உணவுப் புறக்கணிப்புப் போராட்டங்களை உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எட்டு கைதிகளும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் ஒவ்வொருவரும் வழக்கு விசாரணையின்றி ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளுக்குள் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தில்லைராஜை சென்று பார்வையிட்டதாகவும், அவர் மோசமாக நடத்தப்படுகிறார் எனவும், சிறைச்சாலை மருத்துவமனைக்கு கைவிலங்குடனேயே அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும், இது கைதி ஒருவரின் உரிமையை மீறுகின்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





