சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதற்கு இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் நேரில் பேச்சு நடத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் தொடர்பில், ஏற்கனவே சிறைகளில் இருந்து விடுதலையாகிய அரசியல் கைதிகள் மூவர் தன்னை கொழும்பு இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர் எனவும், இதன்போதே தான் இந்த விடயத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் சம்பந்தன் தமிழ் ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
தற்போது அனுராதபுரம் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 8 தமிழ் அரசியல் கைதிகளையும் மிகக் குறுகிய காலப் புனர்வாழ்வின் அடிப்படையிலாவது விடுதலை செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறைகளில் உள்ள ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் கூட்டமைப்பு விரைந்து செயற்பட வேண்டும் என்றும், இந்த விடயத்தில் இனியும் தாமதம் காட்டக்கூடாது எனவும் விடுதலையான அரசியல் கைதிகள் மூவரும் சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த சம்பந்தன், அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பு தொடர்ந்தும் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகின்றது எனவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும், அரசியல் கைதிகள் அனைவரினதும் விடுதலை தொடர்பிலும் அதிக கவனம் எடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விரைவில் சனாதிபதி, பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசி இந்த விடயத்துக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்ட முடிவு செய்துள்ளதாகவும், அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.