அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்வை வழங்க மறுக்கும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ளும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், அதற்கிணங்க வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் சனிக்கிழமை வவுனியாவிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மகசின் சிறைச்சாலையில் 72 பேரும், அனுராதபுரத்தில் 10 பேரும், தும்பர சிறைச்சாலையில் 8 பேரும் ஏனைய 11 சிறைச்சாலைகளிலுமுள்ள கைதிகள் உள்ளடங்களாக நாட்டில் 107 அரசியல் கைதிகள் உள்ளனர் எனவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டும், நன்நடத்தையின் அடிப்படையிலும் அரசியல் கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர் எனவும், தற்போது போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையும் இதுவாகவே காணப்படுகின்றது என்றும், சிவில் உரிமைகளுக்காக போராடியவர்களே அரசியல் கைதிகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பதுடன், இவர்கள் இனவாதிகள் அல்ல எனவும் அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.