தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை உண்மையான உணர்வுடன் முன்னெடுக்குமாறு வலியுறுததப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபன் நினைவு நாள் தொடர்பில் முன்னாள் போராளியான மனோகரால் காக்கா அண்ணன் எனப்படும் மனோகரால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனவும், தற்போது திலீபனின் நினைவு நாளை யாழ்.மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும் என்றும், இந்த இரண்டு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் வேதனையளிக்கின்றன எனவும், ஒரு கட்சி முற்பகல் 10.10 இற்கு நிகழ்வு என்று அறிவித்த நிலையில், சில நாட்களின் பின் இன்னொரு கட்சி காலை 09.30 இற்கு நிகழ்வு என்று அறிவித்தது எனவும், இதில் அஞ்சலி என்பதை விட அடுத்தவனின் காலை வாருவதே கட்சிகளுக்கு முக்கியமானதாக தெரிந்தது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் உணர்வுள்ள தமிழர்களுக்கு கவலையளித்தன எனவும், திலீபன் உணவுப் புறக்கணிப்புமிருந்த காலத்தில் அவனைப் பார்த்திருந்த ஒரு சிலரைத் தவிர ஏனையோர் தான் சச்சரவில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர் எனவும், அவர்கள் மனதில் திலீபனின் நினைவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை உணர்த்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓர் ஒழுக்கமான கீழ்ப்படிவுள்ள சிப்பாயே பின்னர் படையணிகளை சரியாக நெறிப்படுத்தும் தளபதியாக விளங்குவான் என்பது எமது தலைவரின் கூற்று எனவும், யூ.எஸ். விடுதியிலும், மாகாண சபையிலும் ஆர்னோல்ட் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்த மக்களுக்கு, இவர் இந்த நிகழ்வைப் பொறுப்பெடுப்பது திலீபனின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகமாகவே தென்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திலீபனின் நினைவு நிகழ்வு மட்டுமல்லாது எதிர்வரும் மாவீரர் நாள் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல்வாதிகளோ, உள்ளூராட்சி மன்றங்களோ தலையிடாது, அதன் உறுப்பினர்கள் சாதாரண பிரஜைகளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.