அமைதி பேச்சுவார்த்தைக்கான பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்திய பலவீனமாக கருதக் கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தானிடையே தடைப்பட்டுள்ள அமைதிப் பேச்சுக்களை தொடரவேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை முதலில் ஏற்றுக்கொண்டது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு நடாத்துவார்கள் என்றும் தெரிவித்தது.
எனினும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீற்றல் உள்ளிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து குறித்த அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே இந்தியாவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான், இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் தனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம் காட்டியதால்தான் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.