அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எதிர்வரும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் சீனா தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கி உரையாற்றுகையில் அவர் அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகைகளில் சீனா பிரசார வாசகங்களைக் கொண்ட விளம்பரங்களைக் கொடுப்பதாகவும் அவர் குறைகூறியுள்ளார்.
தமது குடியரசுக் கட்சி வெற்றிபெறுவதைச் சீனா விரும்பவில்லை என்றும், அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் தான் என்பதால் தன்னையோ அல்லது தங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த அந்த கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அதிபர் டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், நியாயமற்ற குற்றச்சாட்டுகளைச் சீனா ஏற்காது என்றும் கூறியுள்ளார்.
சீனா எப்போதும் தனது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதித்ததில்லை என்றும், அதேபோன்று மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதுமில்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.