அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் இப்போது அனைத்துலக சமூகத்தின் முன் சென்று தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றால், அதற்காக தற்போதைய அரசாங்கத்துக்கே அவர் நன்றி கூற கடமைப்பட்டவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
2014 டிசெம்பரில் உலகப் படத்தில் இலங்கை இரத்தக்கறையினால்
அடையாளப்படுத்தப்பட்டிருந்தது எனவும், போரில் மனித உரிமைகளை மீறியதாக தம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது என்றும், தமது தலையீடு இல்லாமலேயே, அனைத்துலக விசாரணை நடத்தப்படவிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015இல் பதவிக்கு வந்த புதிய அரசாங்கமே, எந்தவொரு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், நியூயோர்க்கிலும், ஜெனிவாவிலும், உள்ள ஐ.நாவுக்கு கூறியது எனவும், அரசாங்கத்தின் அந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டே, ஐ.நா தனது அனைத்துலக விசாரணையை நிறுத்தியது என்றும் அவர் விபரித்துள்ளார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தியது தற்போதைய அரசாங்கம் தான் எனவும், இல்லாவிட்டால் அவர் அனைத்துலக நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டிருப்பார் என்றும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.