அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா மீறிவிட்டார் எனவும். இது தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், அது மட்டுமல்லாது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பிலும் போராட்டம் நடாத்தவுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமது உயிர்களை துச்சமாக மதித்து சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உணவுஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும், அவர்கள் தங்களை மன்னித்து விடுவிக்க வேண்டும் அல்லது மறுவாழ்வு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று கோருகின்றார்கள் எனவும், அவர்கள் விடுவிக்கப்படவேண்டியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பியினரும் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடியவர்களே எனவும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஆயிரக்கணக்கானவர்களை சிறையிலிருந்து அரசாங்கம் விடுவித்தது என்றும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விடயம் ஆராயப்பட்டது எனவும், ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் என்பதால், இந்த விடயம் இழுத்தடிக்கப்படுகின்றது எனவும் அவர் சாடியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் எதற்காகப் போராடினார்கள் என்ற உண்மைகளை கண்டறியாமல், பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், தமிழ் அரசியல் கைதிகளை வாட்டி வதைத்து அவர்கள் உயிருக்கு உலை வைக்கின்றார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த அரசின் செயற்பாட்டை நாங்கள் கண்டிப்பதாகவும், தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் எனவும், அவ்வாறு விடுவிக்கப்படாத பட்சத்தில் இந்தப் போராட்டங்களை கொழும்பில் தொடரவேண்டி இருக்கும் என்றும், போராடுவது மட்டுமல்லாது ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடத்தில் முறையிடவேண்டியிருக்கும் எனவும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்துள்ளார்.