அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை காலை மதவாச்சியிலிருந்து ஆரம்பமாகி அனுராதபுரம் சிறைச்சாலை வரை முன்னெடுக்கப்படவுள்ள நடை பவனியில் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு அணிதிரளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன் அரசியல் கைதிகள் கடும் குற்றசெயல்களை செய்த குற்றவாளிகள் அல்ல எனவும், அன்றைய சூழலில் கட்டளையிட்டவர்கள் எல்லாம் நாடாளுமன்ற கதிரைகளை அலங்கரித்துகொண்டிருக்கும் இந்த சூழலில் சாதாரண செயற்பாடுகளை செய்தவர்கள் பல ஆண்டுகளாக சிறைக்கூடங்களிலே இருக்கிறார்கள் எனவும் அவர்கள் சாடியுள்ளனர்.
இவர்களது பிரச்சினையை இலங்கை அரசாங்கம் அரசியல் பிரச்சினையாக பார்த்து, அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்களது பிரச்சினையை சட்டத்திற்குட்பட்டு தீர்க்க வேண்டாம் என்றும், அதனை சட்டவிவகாரத்திற்குட்பட்ட பிரச்சினையாக பார்க்ககூடாது என்றும், அவர்கள் வாழவேண்டியவர்கள் என்ற வகையில், அவர்கள் தொடர்ந்து உயிர்வாழவேண்டும் அதற்கு சந்தர்பம் வழங்கபட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்கள் விடுதலையாக்கபட வேண்டும் என்பதை மனிதாபிமான ரீதியாக உணர்ந்து அவர்களை விடுதலைசெய்ய வேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் அரசிடம் கோரிக்கையினை முன்வைக்கிறோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.