ரொரன்ரோ பெரும்பாகத்தில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனடா போஸ்ட் பணியாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.
24 மணிநேரங்கள் சுழற்சி முறையிலான போராட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுத்துள்ள அவர்கள், மூன்றாவது நாளாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இந்த போராட்டத்தை நாடு தழுவிய ரீதியில் சுழற்சி முறையில் தொடங்கியுள்ள அவர்கள், முதலில் விக்டோரியா, எட்மண்டன், வின்ட்சர் மற்றும் ஹலிஃபெக்ஸ் ஆகிய நகரங்களில் பணிப் புறக்கணிப்பினை மேற்கொண்டிருந்தனர்.
தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்த முன்மொழிவை கனடா போஸ்ட் ஏற்றுக்கொள்ளும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இரண்டு தரப்புக்கும் இடையே பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், தீர்மானங்கள் எவையும் எட்டப்படாத நிலையில், இன்றும் போராட்டம் தொடர்வதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
எனினும் நாளை நாட்டின் எந்த பாகத்தில் இந்த போராட்டம் தொடரும் என்ற அறிவிப்புகள் எவையும் இதுவரை வெளியிடப்படவிலலை.
குறித்த இந்த தொழிற்சங்கத்தில் கனடா போஸ்டில் பணியாற்றும் 50,000 பேர் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில், ரொரன்ரோ பெரும்பாகத்தில் மட்டும் ஏறக்குறைய 9,000 பணியாளர்கள் இந்த பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.