நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் ஏன் இழுத்தடிப்புகளை செய்து வருகின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 100க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மாற்று சட்டத்தை கொண்டு வருவதாக அனைத்துலக சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய, அரசியல் கைதிகளும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இலங்கை நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.