இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று 188 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பன்ங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
விமானத்தில் 178 பெரியவர்கள், 1 குழந்தை, இரண்டு கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 விமானப் பணியாளர்கள் என 188பேர் இருந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிருடன் இருக்கிறார்களா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் யூசூஃப் லத்தீஃப் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.
விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று அந்த விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை விமானத்தில் இருந்தவர்களை தேடி மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பொருட்கள் என நம்பப்படும் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று மீட்புப் பணியாளர் ஒருவர் கீச்சகப் பதிவில் பகிர்ந்துள்ளார்.