இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது எடுத்துள்ள முடிவு, அடுத்த ஜெனீவா அமர்வில் இலங்கையை பாதிக்கும் என்று, மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர், பிரதமரை மாற்றியமை, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை ஆகியன அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானதென்றும், சட்டவிரோதமானதென்றும், சனநாயக மீறல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பொருளாதாரம், நாட்டின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை என்பன குறைவடைந்துள்ளதெனவும் தெரிவித்துள்ள அவர், விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி இதற்கு தீர்வுகாண வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அது மாத்திரமன்றி, அரசியல் நிலைத்தன்மையற்ற நிலையிலுள்ள நாடு என்று இலங்கை முத்திரை குத்தப்பட்டு, அதனால் நாட்டின் பொருளாதாரம் கீழ்மட்டத்திற்குச் செல்லுமென்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் 5 மாதங்களில் கூடவுள்ள ஜெனீவா அமர்வில் இலங்கையின் தற்போதைய நிலை பாதிப்பை ஏற்படுத்துமென்றும், அது இலங்கைக்கு பின்னடைவாக அமையும் என்றும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இதன்போது குறிப்பிட்டுள்ளார்.