வட அமெரிக்காவில் இணைய திருடர்களால் பொதுவாக அதிகம் இலக்குவைக்கப்படும் நிறுவனமாக CIBC எனப்படும் கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இந்த தகவலை வெளியிட்டுள்ள பிரான்சை தளமாக கொண்ட மின்னஞ்சல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று, இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் குறித்த வங்கி மீதான போலி மின்னஞ்சல் மூலமான தாக்குதல் முயற்சிகள் 600 சதவீதத்திற்கும் அதிகம் என்று கூறியுள்ளது.
பொதுமக்கள் தமது தனிப்பட்ட தரவுகளைக் கொண்டு இணையம் மூலம் கையாளும் முக்கியமான முதன்நிலையில் உள்ள 25 நிறுவனங்களுள், குறித்த இந்த வங்கி மட்டுமே இவ்வாறான இணைய தாக்குதல் முயற்சிகளை அதிகம் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இந்த வங்கிக்க நாள் ஒன்றுக்கு சராசரியாக 5.3 புதிய இணைய ஊடுருவல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், இது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 622 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை குறித்த இந்த வங்கியின் இணையத் தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயணாளிகளுக்கு அனுப்பப்படுவதாகவும், இதன்மூலம் பயனாளிகளின் இரகசியத் தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.