தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஏதிலிகளின் முகாம்களுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளால், அங்குள்ள ஈழ ஏதிலிகள் மத்தியில் நிச்சயமற்றத் தன்மை ஒன்று உருவாகி இருப்பதாகவும், இதனால் அவர்களில் பலர் சட்டவிரோத படகு பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழக காவற்துறையின் கியு பிரிவு அதிகாரி ஒருவர், 2015ம் ஆண்டுக்குப் பின்னர் சட்டவிரோதமான படகு பயணங்கள் குறைவடைந்ததாகவும், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் ஏதிலிகள் பலர் நாடு திரும்பும் எண்ணத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றத் தன்மையின் காரணமாக, மீண்டும் அவர்கள் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் முகாம்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், சிறப்பு கண்காணிப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.