கஜா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சம்பவங்களில் தமிழ்நாட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை நாகப்பட்டினத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் கரையைக் கடந்த கஜா புயல் தற்போது தமிழ்நாட்டின் உள்மாவட்டமான திண்டுக்கல் அருகில் மையம் கொண்டுள்ளது.
இதன் விளைவாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை நீடித்து வருவதுடன், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த புயலை அடுத்து அரசு ஏற்பாடு செய்த 421 நிவாரண முகாம்களில் சுமார் 81000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதத்தை எதிர்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இதற்கிடையில் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நவம்பர் மாதம் 18ஆம் நாள் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.