செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பான ஒலிப்பதிவு குறித்து தனக்கு விவரிக்கப்பட்டதாகவும், ஆனால் தான் அதை கேட்கப்போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அது ஒருத்தரின் துயரை சொல்லும் பதிவு என்றும், கொடூரமான ஒன்று எனவும் ஊடகம் ஒன்றிடம் அவர் விபரித்துள்ளார்.
அத்துடன் தனக்கு இந்த கொலை பற்றி எதுவும் தெரியாது என்று சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மான் தெரிவித்ததாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த கொலையை செய்தது யார் என யாரும் கண்டுபிடிக்காமல் கூட போகலாம் என்று கூறிய டிரம்ப், கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள் மீது அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அதே சமயம் தமக்கு கூட்டணி ஒன்று உள்ளது என்றும், அந்த கூட்டணியுடன் ஒத்துப் போக வேண்டும் என்பதுடன் அது பல வகைகளில் நமக்கு நன்மை அளிக்கும் எனவும் அதிபர் டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 2ஆம் நாள் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டார்.
ஜமால் கஷோக்ஜியின் கொலை செளதியின் பட்டத்து இளவரசரால் ஆணையிடப்பட்டது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ தெரிவித்ததுள்ள போதிலும், வெள்ளை மாளிகை அதனை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதேவேளை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள செளதி அரேபியா இதில் பட்டத்து இளவரசருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.