கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் டிசெம்பர் 05ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு கோட்டே நீதிவான் ரங்க திசநாயக்க உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில், அவர் கொழும்பு மகசீன் புதிய விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரிடம், பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், நேற்று இரவு 8.30 மணியளவில் அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் போது அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, வெலிக்கடை சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு கோட்டை நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷாச உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.