அண்மையில் ரொரன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது தடவையாகவும் ரொரன்ரோ நகரபிதாவாக தேர்வாகியுள்ள ஜோன் ரொறி இன்று ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டை முதன்முறையாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இன்று Queen’s Parkஇல் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், மாநகர மாநில அரசுகளுக்கிடையேயான பகிரப்பட்ட முன்னிரிமையான விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் போக்குவரத்து, கட்டுபடியான விலையில் வீடுகள், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் எவ்வாறு இரண்டு தரப்பு அரசாங்கங்களும் இணைந்து பணியாற்றுவது என்பது தொடர்பில் இன்றைய சந்திப்பின் போது விவாதிக்கவுள்ளதாக ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இரண்டு தரப்பும் இணைந்து பணியாற்றுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும், அது குறித்து அக்கறை செலுத்துமாறே மக்களும் தங்களிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில அரசாங்கம், இன்று பிற்பகல் முதல்வர்களுடனான சந்திப்பு ஒன்றினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ மேற்கொள்ளும் நிலையில், அதற்கு முன்னதாக முதர்வர் டக் ஃபோர்டடும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறியும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேர்தலின் பின்னர் ரொரன்ரோ மாநகரசபை நேற்று முதன்முறையாக கூடியுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான இன்று இந்த சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.