இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அழைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்திருந்தது.
அதற்காக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தினால் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு விரைவில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதன் பின்னர் இது தொடர்பில் பிரித்தானிய அரசு முடிவெடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதேவேளை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.