மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அவுஸ்திரேலியா அங்கீகரிக்கும் என்று அந்த நாட்டு தலைமை அமைச்சர் ஸ்காட் மோரிசன்( Scott Morrison)தெரிவித்துள்ளார்.
ஆனால், அமைதி உடன்படிக்கை ஏற்படும்வரை தூதரகத்தை டெல்அவிவ் நகரில் இருந்து மாற்றப்பட மாட்டாது என்றும் அவர் இன்று கூறியுள்ளார்.
அமைதி உடன்படிக்கையில் கிழக்கு ஜெருசலேம் நகரின் நிலை குறித்து தீர்மானிக்கும்போது, எதிர்கால பாலஸ்தீனத்தின் நலன்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தியுள்ளார்.
யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என்று கூறி வருகிற அதேவளை, பாலஸ்தீனர்களும் கிழக்கு ஜெருசலேமை தங்கள் தலைநகராக கருதுகிறார்கள்.
இந்த விவகாரம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தையும் திறந்துள்ளது.
இதனை அடுத்து இஸ்ரேல் நாட்டவர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.