பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணம் வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
இதனால் வெள்ளை ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என தெரியவந்தது. ஏற்கனவே வெள்ளை அட்டை வைத்துள்ள பலர் பணம் பெற்றுள்ள நிலையில் கிடைக்காத சிலர் வேதனை பட்டு வந்தனர்.
இந்நிலையில் சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.