மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த இடங்களில் சர்வதேச கண்காணிப்புடன் மனித புதைகுழி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, மண்டைதீவு உட்பட வடபுலத்தில் புதைகுழிகள் உள்ளன என, நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “மன்னார் புதைகுழியிலிருந்து 26ற்கு மேற்பட்ட குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட எலும்புக்கூடுகளும் அங்கு மீட்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வுப் பணிகளுக்கு சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும். ஏனெனில் ஏராளமான மக்கள் காணாமல் போயுள்ளனர். எங்களிடம் சரியான புள்ளிவிபரங்கள் இல்லை.
1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடலில் வைத்தும், வீடுகளில் வைத்தும் தமது உறவுகள் காணாமல் போயுள்ளார்கள் என என்னிடத்தில் தற்பொழுதும் பதிவு செய்கின்றவர்கள் உள்ளனர்.
அத்தோடு மனித எழும்பக்கூடுகள் மீட்கப்படும் சமயத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், காணாமல் போன தமது உறவுகளின் எச்சங்களாக இருக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மண்டைதீவு உட்பட மேலும் பல தீவுகளில் மனித புதைகுழி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசியல் தலைவர்களும், பொது அமைப்புக்களும் சர்வதேசத்தின் உதவியினை நாட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.