” நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். இந்தப் பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது… நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன் ” என உறுதிபடக் கூறுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!
இவரின் அடையாளங்கள் அண்டவியல் ஆராய்ச்சிகள்தாம். டைம் மெஷின் (Time Machine), பிளாக் ஹோல் (Black Hole), ஏலியன் (Alien), பிக்பேங் தியரி (Bigbang Theory) என அண்ட அறிவியலின் பல மைல்கல் ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இமேஜினரி டைம் (Imaginary Time) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இவர் எழுதிய “எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” ( A Brief Histroy of Time) என்ற புத்தகம், தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தி யுனிவர்ஸ் இன் எ நட் ஷெல் (The Universe in a nut shell), மை ப்ரீஃப் ஹிஸ்டரி (My Brief History) உட்பட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். ஹாலிவுட்டின் பல படங்கள், இவரின் கோட்பாடுகளைத் தழுவியே எடுக்கப்படுகின்றன.
மேல் வரிசையில் பற்கள் கிடையாது. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி வெளிவந்து நிற்கும். தலை, வலது பக்கம் சாய்ந்திருக்கும். நெற்றியை அதிகம் மறைக்காத மயிர். கேமராவும் சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி. கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட வீல் சேர். மிகக் குறைவான எடைகொண்ட பொட்டலமாய், சுருண்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவம். கன்னத்தில் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்துபோய்விட்டன. எந்தவொரு மனிதனும் வாழவே முடியாத சூழல். ஆனால், அளப்பறிய சாதனைகளோடு சரித்திரம் படைத்துவரும் ஓர் அதி அற்புதன். இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத் தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். அது அத்தனை அழகாய் இருக்கும். உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவு – அழகன் ஸ்டீபன் ஹாக்கிங்…