“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள்! ஆனால் இவ்வருடத் தொடக்கத்தில் வழிகள் யாவும் மங்கலாகவே தெரிகின்றன. அரசியல் யாப்பு, தேர்தல்கள், ஜெனிவாக் கூட்டங்கள் எல்லாமே தமிழ் மக்களுக்கு மங்கலான பாதைகளையே காட்டி நிற்கின்றன. எமது வடகிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் கூட பல பல விதங்களில் பிரிந்தே காணப்படுகின்றனர். அரசியல் ரீதியாக, மத ரீதியாக, சமூக ரீதியாக இன்னும் பல வழிகளில் எமது மக்கள் பிரிந்தே நிற்கின்றார்கள். மேலும் அண்மைய வெள்ளம் புகுந்து வெள்ளாமை அழிவடைந்த நிலையில் பல இடங்களில் எம் மக்கள் காணப்படுகின்றார்கள். இவ்வாறான சூழலிலே தான் ஆதவன் தைத்திருநாளில் மேலெழ உள்ளான்.
சூரியன் பாற்பட்டதே இவ்வுலகம். அவன் ஒளிக்கதிர்கள் எம்மேல் படா தொழிந்தால் எமக்கு வாழ்வில்லை, வளமில்லை, வாழ்க்கையுமில்லை. அவன் ஒளிபட்டால் வாழ்வு துலங்கும்; வளம் பிறக்கும்; வாழ்க்கை சிறக்கும். சிறந்ததொரு வாழ்க்கையை எம் அனைவருக்கும் இவ்வாண்டில் வழங்கிட அந்த ஆதவனை ஆர்வத்துடன் இந்த நன்நாளில் வேண்டுவோம்.
தமிழர்கள் அனைவருக்கும் ஒருமித்த ஒன்றுபட்ட வாழ்க்கையைக் கொடுத்து நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அவர்களுக்கு அவன் அருள்வானாக! ஒற்றுமையே எமது பலம். ஒன்றுபட்ட எமது செயல்கள் வளந்தரும்; வாழ்வு தரும். இந் நன் நாளில் எல்லோரும் இன்புற்றிருக்க ஆதவன் ஆசி வழங்குவானாகவென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.