பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் – ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளிடம் தமிழ் பிரதிநிதிகள் வலியுறுத்து
கடந்த புதன்கிழமை 16.01.2019 அன்று புருசல் மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற நடவடிக்கை சேவையின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தலைமை அதிகாரிகளுடனும்
சிறிலங்காவுக்கான உயரதிகாரியுடனும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்த தமிழ் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு ஒன்றை நடாத்தி உள்ளனர்.
இச் சந்திப்பில் பிரதானமாக தாயகத்தில் இன்றும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பு வடிவங்கள் தொடர்பாக ஆழமாக எடுத்துரைகப்பட்டதோடு சிறிலங்கா அரசாங்கம் ஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் எனும் வேடம் தரித்தபடி சர்வதேசத்தை ஏமாற்றி வருகின்றதையும் மறுபுறம் தமிழர் தாயகத்தில் பல்வேறு மனிதவுரிமை மீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதோடு தமிழர் தாயகத்தை முற்றாக சிங்களத்துவமாக மாற்றியமைக்கவும்,தமிழ்ச் சமூகத்தை மிரட்டும் போக்கினைக் கைக்கொண்டு தமிழ்ச் சமூக விழுமியங்களை அது நிலைகுலைய வைப்பதையும் முனைப்பாக செய்துவருகின்றதை தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் கோடிட்டுகாட்டினர்.
சிறிலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல், அங்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தாமல், இவ் விடயம் சார்ந்த முக்கிய சர்வதேச உதவிகளை நிராகரிக்கும் வகையில் தனது நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினர்.
ஐநா மனித உரிமை பேரவையில் தொடர்ச்சியாக பல முறைகள் இலங்கை தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் தமிழர் தாயகத்தில் இன்றும் பல்வேறு வகையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்றுவரை சிறிலங்காவில் எந்த அரசாங்கமும் நீதி மறுப்பில் வேறுபாடின்றி தொடர்ந்து தன்பாதையில் நீதி மறுத்து வருகின்றது. தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் , தமிழர்கள் காணிகள் அபகரிப்பு , தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவ பிரசன்னம் ,தமிழர் தாயகத்தில் பவுத்தமயமாக்கல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர் போராட்டம், அரசியல்- மற்றும் போர்க்கைதிகள் விடையம், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலத்தில் மீள் குடியேற முடியாதநிலை என்கிற பல விடயங்களில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இவ் அனைத்து சர்வதேச குற்றங்களையும் இழைத்த இனவழிப்பு சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உள்ளக நீதி விசாரணை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எக்காலமும் நீதியை நிலைநாட்டாது என்றும் , கடந்த 70 வருட காலத்தில் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் இப்பொறிமுறையில் தமிழ் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றும் , எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு மீண்டும் எவ்வித காலநீடிப்பும் வழங்காத வகையில் பன்னாட்டு சுயாதீன விசாரணையே சர்வதேச சமூகம் கொண்டுவருவதன் ஊடாகவே ஈழத்தமிழர்களின் இனவழிப்பிற்கு உண்மையான நீதியை நிலைநாட்ட முடியும் என வலியுறுத்தினர்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தல் மற்றும் நீதி வழங்கல் பொறிமுறை என்பன குறித்த கடப்பாட்டினை அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையானது வலுவிழக்கச் செய்துவிடும் என்ற அச்சத்தில் தாம் இருந்ததாகவும், இருப்பினும் நீதிக்காக தொடர்ந்து போராடும் தமிழர்களின் நிலையை தாம் மிகவும் கரிசனையோடு கவனத்தில் கொள்வதாகவும் , தாம் பிரயோகிக்கக் கூடிய அதிகமான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக கொடுத்துவருவதாகவும் ஆனால் இப் படிமுறை ஒரு நீண்ட காலவரையறையை கொண்டதாகவே அமையும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற நடவடிக்கை சேவையின் உயரதிகாரிகள் தமது கருத்தாக தெரிவித்தனர்.
இச் சந்திப்பின் உரையாடலின் நிறைவாக தமிழ் பிரதிநிதிகளால் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் எனவும், தமிழ் மக்கள் தமது அரசியல் வேணவாவை தாமே நிர்ணயிக்கும் முகமாக ஐநா சபையின் கண்காணிப்பில் சர்வதேச வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது.
இச் சந்திப்பில் தமிழ் இளையோர்கள் சார்பாகவும், ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் சார்பாகவும் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.