அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவருக்கும் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகினஅமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. இதனிடையே மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பர விருப்பம் தெரிவித்தனர்.அதன்படி இருநாட்டு தலைவர்கள் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. உச்சி மாநாட்டுக்கான தேதி மற்றும் இடம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், அமெரிக்கா வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தலைநகர் வாஷிங்டன்னில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டிரம்ப்-கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், “இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அடுத்த 2 மாதங்களில் நடக்கும்” என தெரிவித்தார்.