திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி, யாழ்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்;டம் ஒன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஊடக மையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நிiiவுத் தூபியில் நினைவேந்தல் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததுடன், படுகொலை செய்யபட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 43 தமிழ் ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக கூறினார்.