கூட்டு ஒப்பந்தத்தினூடாக கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் என தெரிவித்து தோட்டத் தொழிலாளர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவ ஹற்றன் பிரதான வீதியை மறித்து செல்வகந்தை பிரதேசத்தில் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போக்குவரத்து தடையை ஏற்படுத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் கெம்பியன், பெற்றசோ, செல்வகந்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு கோஷங்களை வெளியிட்டவாறு கலந்துகொண்டனர்.
கூட்டு ஒப்பந்தத்தினூடாக நாளை கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டகாரர்கள், வாக்குறுதி வழங்கியவாறு ஆயிரம் ரூபாய் சம்பளமே எமக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது ஹற்றன் தொடக்கம் பலாங்கொடை வரையிலான பிரதான வீதியின் போக்குவரத்து பலமணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.