தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்கள் நீக்கப்படாவிடின் பிரித்தானியாவில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.
ஒளிப்படப் பகிர்வுத் தளமான இன்ஸ்டாகிராமே தனது மகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்ததாக தந்தையொருவர் குற்றச்சாட்டினை முன்வைத்தார். குறித்த குற்றச்சாட்டைத் தொடர்ந்தே சுகாதார அமைச்சரின் இக்கருத்து வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், ”இந்த அற்புதமான தொழில்நுட்பம் நல்ல விடயங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். மாறாக இளைஞர்களையும், யுவதிகளையும் தற்கொலைக்கு தூண்டுவதனை அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட்டு வருவதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூகவலைத்தளத்தில் தற்கொலை தொடர்பான தகவல்களைப் பார்த்து அமைதி குலைந்து தனது 14 வயது மகள் உயிரிழந்ததாக தந்தையொருவர் பிபிசி ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.
அவர் கடந்த 2017ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது மகளின் உயிரிழப்பிற்கு இன்ஸ்டாகிராமே காரணமாக அமைந்ததாகவும் தந்தை குறிப்பிட்டுள்ளார்.