திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம், பாரதிபுரத்தில், 01/02/1988 அன்று காலை 5.00 மணிக்கும் 6.00 மணிக்கும் இடைப்பட்ட அந்த விடியல் பொழுதில், இலங்கைக் காவல்துறை நிலையத்திலிருந்த காவல்துறையினரும் ஊர்காவல் படையினரும், அப்பகுதிகளில் வயல்வெளிக்கும், பணிக்கும் சென்று கொண்டிருந்தவர்களை விசாரணை எனக்கூட்டிச் சென்று காவலரணனின் முன்னால் நிற்கவைத்தனர். காரணம் ஏதுமின்றி இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவிகள் நிதானிக்கும் முன்பு, சுற்றி நின்று சுட்டுத் தள்ளினர். மொத்தமாக 8 உடல்கள், சில கணங்களில் பிணமாகச் சரிந்தன. தொடர்ந்து நாலாபக்கமும் இலக்கின்றிச் சுட்டதில் 17 படுகாயமடைந்தனர். உயிரிழந்த எட்டுப்பேரில், நான்குபேர் பள்ளிப்படிப்பை முடிக்காத மாணவர்கள். அவா்களில் இருவர் பதின்ம வயதில் இருந்த சகோதரர்கள்.
சுட்டுக்கொன்ற பின்னும் கொலைவெறி அடங்காத காவல்துறை, பிணங்களை உதைத்தும் குத்தியும் உருக்குலைத்தது. உயிரிழந்த ஆறுமுகம் சேகர் என்பவரின் ஆண் உறுப்பை வெட்டி அவரது வாய்க்குள் திணித்துவிட்டுச் சென்றது.
அதிகாலைவேளையில் நடந்த கோரக் கொலையால் தமபலகாமம் மீண்டும் ஒருமுறை கதிகலங்கியது. பிணமாகப் பிள்ளையைப் பார்த்த பெற்றோர், தந்தையைப் பார்த்த குழந்தைகளின் கதறல், அந்த வைகறைப் பொழுதை அதிரவைத்தது. அவர்களின் கண்ணீரில் அந்தக் கிராமமே நனைந்தது. அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற அச்சத்தில் பலர் உறைந்துபோயிருந்தனர். அன்று விழுந்த பேரிடியால், மீண்டும் தமது கிராமத்தை விட்டு இடம்பெயரத்தொடங்கினார்கள்.
அன்றைய சம்பவத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகள் விபரம்
1. அமிர்தலிங்கம் சுரேந்திரன், 14
2. அமிர்தலிங்கம் கஜேந்திரன், 18
3. முருகேசு ஜனகன், 17
4. நாதன் பவளநாதன், 45
5. சுப்பிரமணியம் திவாகரன்
6. குணரத்தினம் சிவராஜன்
7. ஆறுமுகம் சேகர்
8. பொன்னம்பலம் கனகசபை